மேலும் செய்திகள்
நீர்நிலைகளில் எச்சரிக்கை; அறிவிப்பு பலகை வைப்பு
22-Nov-2024
திருப்புல்லாணி: ஜூலை முதல் செப்., மாதங்களில் திருப்புல்லாணி, கீழக்கரை, பெரியபட்டினம், தினைக்குளம், களிமண்குண்டு, ரெகுநாதபுரம் மற்றும் கடலாடி தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் ஊருணிகள் கண்மாய் உள்ளிட்ட நீர் நிலைகள் துார்வாரப்பட்டுள்ளன.தொடர் மழையால் பெரும்பாலான கண்மாய் ஊருணி உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகிறது. முன்பு 7 அடி ஆழம் இருந்த ஊருணிகளில் மண் அள்ளியதால் தற்போது 15 முதல் 20 அடி ஆழத்திற்கு அளவுக்கு அதிகமாக தோண்டப்பட்டுள்ளதால் தண்ணீர் முழுவதும் நிரம்பி உள்ளது.விபத்து அபாயம்: அதிக ஆழத்தில் தோண்டப்பட்ட ஊருணிகளில் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் குளத்தில் இறங்கி குளிப்பதற்கு முற்படும் போது ஆழத்தில் சென்று சிக்கிக்கொள்ளும் அபாயம் தொடர்ந்து நிலவுகிறது.தன்னார்வலர்கள் கூறியதாவது:பெருவாரியாக நிரம்பியுள்ள ஊருணிகளில் குளிப்பதற்கு பொதுமக்கள் தயாராகி உள்ளனர். இந்நிலையில் மெகா பள்ளங்களால் விபத்து ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இதனை தவிர்க்க சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகங்கள், வருவாய்த்துறையினர், போலீசார், தீயணைப்பு துறையினர் ஒன்றிணைந்து கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும்.கிராமங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இது குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி பாதுகாப்புடன் இருப்பதற்கு வழி செய்ய வேண்டும். புயல் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள், மின் விபத்துக்கள் குறித்த தகவல்களை அளிக்க வேண்டும். இவ்விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் உரிய எச்சரிக்கை விழிப்புணர்வை கிராமங்கள் தோறும் ஏற்படுத்த வேண்டும் என்றனர்.
22-Nov-2024