காய்ச்சல் அறிகுறி இருந்தால் சிகிச்சை பெற வேண்டும்: கலெக்டர் அறிவுரை
கமுதி: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெந்நீர் பயன்படுத்த வேண்டும். காய்ச்சல் போன்ற அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனை சென்று உரிய சிகிச்சை பெற வேண்டும் என்று கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கூறினார்.கமுதி அருகே கடம்பனேந்தல் கிராமத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் நடமாடும் மருத்துவக்குழு மருத்துவ முகாமை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தார். அப்போது நத்தம் ஊராட்சியில் 15வது நிதிக்குழு திட்டத்தில் ரூ.25 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டடப் பணிகள், ஆண்டநாயகபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் புதிய ஊருணி அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.பின்னர் அவர் கூறியதாவது: மழைக்காலம் துவங்கியதையொட்டி வைரஸ் காய்ச்சல் பொதுமக்களை பாதிக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் வட்டார டாக்டர்கள் தலைமையில் நடமாடும் மருத்துவக்குழு செயல்பட்டு வருகின்றனர். கிராமப் பகுதியில் நடைபெறும் மருத்துவ முகாமில்காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ளவர்கள் பரிசோதனை செய்து உரிய சிகிச்சை பெற வேண்டும். ரத்த பரிசோதனை செய்து தேவைப்படுபவர்களுக்கு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும். மருத்துவ பரிசோதனை செய்து வைரஸ் காய்ச்சல் தாக்காத வகையில் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெந்நீர் பயன்படுத்த வேண்டும். அதே போல் காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனை சென்று சிகிச்சை பெற வேண்டும் என்றார். உடன் பி.டி.ஓ.,க்கள் கோட்டைராஜ், சந்திரமோகன், வட்டார பொறியாளர் முத்து கலாதேவி உட்பட பலர் இருந்தனர்.