வாகனம் மரத்தில் மோதி ஏழு போலீசார் காயம்
அன்னுார் : ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நேற்று முன்தினம் தேவர் குருபூஜை விழா நடந்தது. இதற்காக நீலகிரி மாவட்டத்தில் இருந்து பாதுகாப்பு பணிக்கு போலீஸ் வாகனத்தில் போலீசார் சென்றிருந்தனர்.பாதுகாப்பு பணி முடித்துவிட்டு, திரும்ப நீலகிரிக்கு செல்லும் வழியில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, அன்னுாரில், மேட்டுப்பாளையம் சாலையில், திடீரென போலீஸ் வேன் சாலையோர மரத்தில் மோதி, விபத்துக்குள்ளானது.இதில் போலீஸ் வேனை ஓட்டி வந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் பிரதீப் குமார், 29. படுகாயம் அடைந்தார். வாகனத்தில் பயணித்த ஆறு பெண் போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.வாகன இடிபாட்டில் சிக்கிய டிரைவரை, தீயணைப்பு துறை வீரர்கள் உதவியோடு, போலீசார் மீட்டு, அன்னுாரில் முதலுதவி அளித்து கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.ஆறு பெண் போலீசாரும், அன்னுார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து அன்னுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.