அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருந்து சிரமப்படுகின்றனர்.முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகள், வெளி நோயாளிகள், சித்த மருத்துவம், மகப்பேறு பிரிவு, எக்ஸ்ரே மையம் உட்பட தனித்தனி பிரிவாக செயல்பட்டு வருகிறது. முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள காக்கூர், ஏனாதி, இளஞ்செம்பூர், வெண்ணீர் வாய்க்கால், செல்வநாயகபுரம், கீரனுார், ஆத்திகுளம், புளியங்குடி, கீழத்துாவல் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.முதுகுளத்துார் தாலுகாவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக முதுகுளத்துார் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பி வைக்கின்றனர். கர்ப்பிணிகளுக்கும் பரிசோதனை செய்கின்றனர். தற்போது மழைக் காலம் என்பதால் முதுகுளத்துார் வட்டாரத்தில் பல்வேறு கிராமங்களில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் தினமும் தனியார், அரசு மருத்துவமனையில் வழக்கத்தைவிட அதிகளவில் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் 10க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணி புரிய வேண்டிய நிலையில் தற்போது ஒருவர் மட்டும் பணியில் இருக்கிறார். இதனால் காலையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருப்பதால் சிலர் தனியார் மருத்துவமனைக்கு செல்லும் அவல நிலை உள்ளது. இதனால் கிராமங்களில் இருந்து வரும் ஏழை நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அரசு முதுகுளத்துார் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களுக்கு தலைமை மருத்துவமனையாக உள்ள இங்கு கூடுதல் டாக்டர்களை பணியமர்த்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.