ரோட்டில் உலர வைத்து பிரிக்கப்படும் சிறுதானிய பயிர்கள்
கமுதி: -கமுதி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உலர்களம் வசதி இல்லாத தால் விவசாயிகள் வேறு வழியின்றி ஆபத்தான முறையில் ரோட்டில் சிறுதானியப் பயிர்களை பிரித்து எடுப்பதால் விபத்து அபாயம் உள்ளது. கமுதி அருகே பேரையூர், மருதங்கநல்லுார், கருங்குளம், பாக்குவெட்டி உட்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் விவசாயத்திற்கு அடுத்த படியாக சிறுதானிய பயிர்களான உளுந்து, கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்கின்ற னர். தற்போது ஓரளவு நன்கு மகசூல் அடைந்து உள்ள நிலையில் சிறு தானியப் பயிர்களை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதுகுளத்துார், கமுதி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் உலர்களம் வசதி இல்லாததால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். -பரமக்குடி ரோடு, கமுதி ரோடு, -அபிராமம் ரோடு உள்ளிட்ட போக்குவரத்து மிகுந்த இடங்களில் ஆபத்தை உணராமல் விவசாயிகள் ரோட்டில் சிறுதானியப் பயிர்களை உலர வைத்து பிரித்தெடுக்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் விவசாயிகளின் நலன் கருதி முதுகுளத்துார் ,கமுதி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உலர்களம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.