பூட்டிகிடக்குது சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் அலுவலகம்: மக்கள் ஏமாற்றம்
ராமநாதபுரம்:ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்டம் தனி தாசில்தார் அலுவலகம் சில நாட்களாக பூட்டியுள்ளதால் அங்கு வரும் மக்கள் ஏமாற்றமடை கின்றனர். ராமநாதபுரம் தாலுகாவில் நகர், ஊராட்சிப்பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடக்கிறது. இம்முகாமில் பங்கேற்க சமூக பாதுகாப்பு திட்டம் தனி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள அனைத்து பணியாளர்களும் தினமும் சென்று விடுகின்றனர். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக அலுவலகம் பூட்டியே உள்ளது. இதனால் முதியோர், விதவை உதவித்தொகை விண்ணப்பம் பெறுவது மற்றும் முகாம் நடை பெறும் இடம் குறித்து விபரம் தெரிந்து கொள்ள வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே சமூக பாதுகாப்பு திட்டம் தனிதாசில்தார் அலுவலகத்தில் வரும் பொதுமக்களுக்கு பதிலளிக்க யாராவது ஒருவரை நியமிக்க வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். இதுகுறித்து ராமநாதபுரம் தாசில்தார் ரவி கூறுகையில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்களை வாங்கி பதிவு செய்யும் பணியில் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலக பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அலுவலகத்தை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.