நடுக்கடலில் பழுதான படகு இலங்கை கடற்படை சிறைபிடிப்பு
ராமேஸ்வரம்,:நடுக்கடலில் பழுதாகி நின்ற ராமேஸ்வரம் அருகே மண்டபம் மீனவரின் விசைப்படகை இலங்கை கடற்படை வீரர்கள் சிறைபிடித்து இழுத்துச் சென்றனர்.நவ.18ல் மண்டபத்தில் இருந்து கோவிந்தராஜ் விசைப்படகில் மீனவர்கள் திருமுருகன், விஜயன், கருப்பையா, எஸ்தர் ஆகியோர் தனுஷ்கோடி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அன்றிரவு ராட்சத அலையில் சிக்கி படகின் சுக்கான் மரப்பலகை உடைந்தது.இதனை சரி செய்ய முடியாமல் போனதால் தனுஷ்கோடி அருகே 6ம் மணல் தீடையில் கரை ஏற்றினர். பின் தீடையில் தவித்த 4 பேரையும் மற்ற மீனவர்கள் மீட்டு மண்டபம் கரையில் இறக்கி விட்டனர். நேற்று முன்தினம் 6ம் தீடை பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் அந்தப் படகை சிறைபிடித்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். இப்படகை மீட்க ஆயத்தமாக இருந்த படகின் உரிமையாளருக்கு இலங்கை கடற்படையின் செயல் அதிர்ச்சியளித்தது.