அரசு கல்லுாரியில் தங்கும் விடுதியின்றி மாணவர்கள் சேர்க்கை குறைந்தது
திருவாடானை: திருவாடானை அரசு கலைக்கல்லுாரியில் தங்கும் விடுதி இல்லாததால் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது.திருவாடானை அரசு கலைக் கல்லுாரியில் பி.ஏ., தமிழ், பி.ஏ., ஆங்கிலம், பி.எஸ்சி., கணிதம், கணினி அறிவியல், காட்சி தொடர்பியல், பி.காம் தமிழ் வழி, பி.காம்., ஆங்கில வழி ஆகிய பட்டப்படிப்புகள் உள்ளன.இக்கல்லுாரியில் விரும்பிய பாடப்பிரிவுகள் உடனே கிடைப்பதால் வெளி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கல்லுாரியில் சேர விண்ணபிக்கின்றனர்.ஆனால் தங்கும் விடுதி இல்லாததால் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் கல்லுாரியில் சேர விருப்பம் இல்லாமல் சென்று விடுகின்றனர். இக்கல்லுாரி 2013ல் துவங்கிய போது 500க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் இயங்கியது.கல்லுாரிக்கு சொந்தமாக கட்டடம் கட்டிய பிறகு மாணவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகமாகி 800க்கும் மேற்பட்டோர் படித்தனர். இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இந்த ஆண்டில் இதுவரை 85 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்பம் செய்த போதும் தங்கும் விடுதி இல்லாததால் படிப்பை தொடர முடியாமல் செல்கின்றனர்.ஆகவே மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில் தங்கும் விடுதி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.