இலவச கட்டாயக் கல்வி திட்டத்தில் பயன்பெற மாணவர்களுக்கு அழைப்பு
ராமநாதபுரம்: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் அக்.,17 வரை மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2025---26ம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் குழந்தைகள் (வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின்) நுழைவு வகுப்பில் (எல்.கே.ஜி., அல்லது 1ம் வகுப்பு) சேர்வதற்கு குறைந்தபட்சம் 25 சதவீதம் இடம் வழங்கப் பட்டுள்ளது. அதன்படி சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அக்.,17 நடைபெற உள்ளது. ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுப்பாலினத்தவர், தூய்மைப்பணியாளர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், எச்.ஐ.வி., பாதிக்கப்பட்டோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஒதுக்கீட்டை விட விண்ணப்பங்கள் அதிகமானால் குலுக்கல் நடைமுறை பின்பற்றப்படும். இந்த இட ஒதுக்கீட்டின்கீழ் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் கிடையாது. ஏற்கனவே கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால் 7 நாட்களுக்குள் திருப்பி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் தங்களது குழந்தைகளைச் சேர்த்துள்ள பெற்றோர் பள்ளிகளை அணுகி பயன் பெறலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் காலோன் தெரிவித்துள்ளார்.