பாம்பனில் மாணவர்கள் வீடு தேடிச் சென்று அறிவுரை
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பனில் பள்ளிக்கு தொடர்ந்து வராத இரு மாணவர்களின் வீடு தேடி ஏ.இ.ஓ., சென்று அறிவுரை வழங்கினார். பாம்பன் சின்னப்பாலம் மீனவர் கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு படிக்கும் மீனவர் களின் குழந்தைகள், குடும்பத்தின் வறுமையால் சிறுவயதிலே மீனவராகி கடலுக்கு செல்கின்றனர். இந்நிலையில் இப் பள்ளியில் 3, 7ம் வகுப்பு படிக்கும் அக்காள், தம்பி இருவரும் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. இதையறிந்த மண்டபம் வட்டார கல்வி அலுவலர் ராமநாதன் சின்னப்பாலம் கிராமம் வந்தார். பின் பள்ளி ஆசிரியை நிஷாவுடன் மாணவர்களின் வீட்டுக்கு சென்று அக்கா, தம்பி பள்ளிக்கு வராத காரணத்தை கேட்டறிந்தார். பின் பெற்றோர், மாணவர்களிடம் கல்வியின் பயன்கள், எதிர்கால வாழ்க்கை தரம் குறித்து விளக்கினார். இதை யடுத்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் சம்மதித்தனர். வீடு தேடி வந்து மாணவர்கள், பெற்றோருக்கு அறிவுரை வழங்கிய ஏ.இ.ஓ.,வை கல்வி யாளர்கள் பாராட்டினர்.