கோதண்டராமர் கோயில் இடத்தை தி.மு.க., நகராட்சி துணைத்தலைவர் ஆக்கிரமிப்பா அகற்ற கோயில் நிர்வாகம் நடவடிக்கை
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் துணை கோயிலான கோதண்டராமர் கோயில் பகுதியை ஆக்கிரமித்து தி.மு.க., நகராட்சி துணைத்தலைவரும், இலக்கிய அணி மாவட்ட துணை அமைப்பாளருமான தட்சிணாமூர்த்தி மற்றும் சிலர் மிதக்கும் கல் எனக்கூறி சுற்றுலா பயணிகளிடம் பணம் வசூலிப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்திடம் கோயில் இணை ஆணையர் செல்லத்துரை வலியுறுத்தியுள்ளார். ராமேஸ்வரம்-தனுஷ்கோடி ரோட்டில் கோதண்டராமர் கோயில் உள்ளது. இக்கோயில் பகுதியில் தட்சிணாமூர்த்தி மற்றும் 85 பேர் கோயில் இடத்தை ஆக்கிரமித்தும், கடற்கரைப்பகுதியில் லிங்கம் ஒன்றை அமைத்து கடல் நீரை எடுத்து அபிேஷகம் செய்து ராமர் வழிபட்ட சிவலிங்கம் என பொய் தகவலை பயணிகளிடம் தெரிவித்து ஒருவருக்கு ரூ.20 வீதம் பணம் வசூலித்து வருவதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், எஸ்.பி., சந்தீஷ் ஆகியோரிடம் புகார் தெரிவித்தார். மேலும் தாசில்தார், போலீசாருக்கும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் ஆக்கிரமிப்பை அகற்றம் செய்ய ஆக., 5 ல் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இணை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தட்சிணாமூர்த்தி கூறியதாவது : 10 ஆண்டுகளாக 80 இளைஞர்கள் சங்கம் அமைத்து கோதண்டராமர் கோயில் அருகில் மிதக்கும் கல் வைத்து பக்தர்களிடம் ராமாயண கதையை விளக்குகின்றனர். இந்த சங்க உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்குகிறேன். மற்றபடி எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றார்.