ஓய்வு பூஜாரிகளுக்கு டிஜிட்டல் ஆளறி சான்றிதழ் வேண்டும் கோயில் பூஜாரிகள் நலச்சங்கம் வலியுறுத்தல்
ராமநாதபுரம்:பூஜாரிகள் ஓய்வூதியம் தொடர்பான ஆளறி சான்றிதழ் தபால் துறை மூலம் டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்க ஹிந்து சமய அறநிலையத்துறை வழி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.ராமநாதபுரத்தில் தமிழ்நாடு கோயில் பூஜாரிகள் நலச்சங்க மாநிலத்தலைவர் பி.குமார் கூறியதாவது: கிராம கோயில் பூஜாரிகள் ஓய்வூதியம் தொடர்ந்து பெற ஆண்டு தோறும் ஆளறிச் சான்றிதழ் சம்பந்தப்பட்ட மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மூலம் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. வயதானவர்கள் தாங்கள் வசிக்கும் கிராமப்பகுதிகளில் இருந்து மாவட்டத் தலைநகரங்களுக்குச் சென்று வர சிரமப்படுகின்றனர்.சிலர் நடக்க இயலாமல் படுத்த படுக்கையிலும் இருக்கின்றனர்.தனி வாகனங்களில் சென்றுவர பண வசதியில்லை. அப்படியே சென்றாலும் உதவி ஆணையர் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இருந்தால் தான் அவரைச் சந்தித்து ஆளறி சான்றிதழ் சமர்ப்பிக்க இயலும்.ஒருபுறம் பணச்செலவு, மறுபுறம் சான்றிதழ் சமர்ப்பிக்க இயலாமல் திரும்பி வர வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே சிரமங்களைத் தவிர்க்க தபால் அலுவலகங்கள் மூலம் ஆளறிச் சான்றிதழ் சமர்ப்பிக்க ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.