வாடகைக்கு விடப்படும் வேளாண் இயந்திரம் தேவைப்படும் நேரத்தில் கிடைப்பதில்லை
திருவாடானை : திருவாடானை பகுதியில் உழவு பணிகள் துவங்கிய நிலையில் வாடகைக்கு விடப்படும் வேளாண்துறை இயந்திரங்கள் தேவைப்படும் நேரத்தில் கிடைக்காததால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திருவாடானை தாலுகா திகழ்கிறது. ஆண்டு தோறும் 26,680 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஆடியில் விவசாயிகள் விதைக்க துவங்கி விடுவார்கள். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் நிலங்கள் ஈரப்பதமாக உள்ளது. இதை பயன்படுத்தி விவசாயிகள் முதல் கட்ட உழவில் ஈடுபட்டுள்ளனர். வேளாண்துறை மூலம் வாடகைக்கு விடப்படும் டிராக்டர்கள் மற்றும் இயந்திரங்கள் தேவைப்படும் நேரத்தில் கிடைக்கவில்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து திருவெற்றியூர் விவசாயிகள் கூறியதாவது:வேளாண் பொறியியல் துறை சார்பில் டிராக்டர்கள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு விடப்படுகின்றன. ஆனால் தேவைப்படும் நேரத்தில் இவை கிடைப்பதில்லை. உழவன் செயலியில் பதிவு செய்ய சொல்கின்றனர். அதுவும் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டும். தற்போது நிலங்கள் ஈரப்பதமாக இருப்பதால் டிராக்டர்கள் தேவைப்படுகிறது. உழவன் செயலியில் பதிவு செய்து அதன் பிறகு டிராக்டர் கிடைப்பதற்குள் நிலங்கள் காய்ந்து உழவுக்கு ஏற்றதாக இருக்காது.எனவே தனியார் டிராக்டர்களை நாட வேண்டிய நிலை உள்ளது. வேளாண்துறையில் டிராக்டர்கள் இருந்தும் தக்க நேரத்திற்கு பயன்படாத நிலை தான் உள்ளது. எனவே உழவன் செயலியில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு என்ன பிரச்னை என்பதை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.