பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய கூறல் மீன்கள்: ரூ.1.61 லட்சத்துக்கு விலை போயின
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் மீனவர் வலையில் இரண்டு அரிய வகை இரு கூறல் மீன்கள் சிக்கின. அவற்றை ரூ.1.61 லட்சத்திற்கு நாகபட்டினம் வியாபாரி விலைக்கு வாங்கினார். நவ., 6ல் பாம்பனில் இருந்து 90 விசைப்படகுகளில் மன்னார் வளைகுடா ஆழ்கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் மீன் பிடித்து நேற்று காலை பாம்பன் கரைக்கு திரும்பினார்கள். இதில் காரல் மார்க்ஸ் என்பவரது விசைப்படகில் 6 அடி நீளம் 44.75 கிலோ கொண்ட இரண்டு அரிய வகை இரு கூறல் மீன்கள் சிக்கின. இந்த மீன்களை வாங்க துாத்துக்குடி, நாகபட்டினம், பாம்பன் வியாபாரிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதில் நாகபட்டினம் மாவட்டத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் ஒரு கிலோ ரூ.3600 வீதம் ரூ.1.61 லட்சத்திற்கு இரு மீன்களையும் வாங்கினார். மீன்களுக்கு உரிய விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். * மருத்துவ பயன்பாடு மிக்கது : இந்த மீன்கள் வயிற்றில் உருளை வடிவில் உள்ள காற்றுப்பையை 'நெட்டி' என மீன் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனை மீனவர்கள் 'பண்ணா' என்று அழைக்கின்றனர். ஒரு நெட்டி ஒரு கபடி மைதானம் அளவிற்கு விரிவடையும் எனவும், இதனை இருதய ஆப்பரேஷன் தையலுக்கு பயன்படுத்துவதாகவும், ஜெல்லி மிட்டாய், பீர் பானம் கெட்டுப்போகாமல் இருக்க பயன்படுத்துவதாகவும், இதனால் தான் இந்த மீன்களுக்கு விலை அதிகம் எனவும் மீன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.