வறுமையால் கடலுக்கு செல்லும் சிறுவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி! ஏழை குடும்பங்களுக்கு அரசு உதவ வேண்டும்
தொண்டி: தொண்டி, தேவிபட்டினம் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் குடும்ப வறுமை காரணமாக சிறுவர்கள் ஆழ்கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது, ஏழை மீனவர்களின் குடும்பத்திற்கு அரசு உதவசெய்ய வேண்டும்.எஸ்.பி.பட்டினம் முதல் தேவிபட்டினம் வரை பல ஆயிரம் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் விசைப்படகிலும், 4000 த்திற்கும் மேற்பட்டோர் நாட்டுப்படகிலும் சென்று மீன் பிடிக்கின்றனர். சீலா, வாளை, திருக்கை, நண்டு, இறால் போன்ற பல்வேறு வகையான மீன்கள் இக்கடலில் பிடிக்கப்படுகிறது. வறுமைகாரணமாக இத்தொழிலில் சிறுவர்கள் ஈடுபட்டிருப்பதால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன் நம்புதாளை கடலில் மீன்பிடிக்கச் சென்ற 16 வயது சிறுவன் உட்பட 3 மீனவர்களின் படகு சூறாவளிக் காற்றில் கவிழ்ந்து தவித்த மீனவர்கள் மீட்கப்பட்டனர்.இதே போல் இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்கள் கூறியதாவது: இயற்கை சீற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடலில் மீனவர்கள் பலியாகின்றனர். அந்த மீனவர்களின் வாரிசுகள் வேறு வழியில்லாமல் மீன்பிடிக்க செல்ல வேண்டிய கட்டாய நிலையில் உள்ளனர். இதில் சிறுவர்களும் மீன்பிடிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஏழ்மை நிலையில் வாழும் மீனவர்களின் குடும்பத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்றனர்.----