ஒரு லட்சம் மீனவர்களை திரட்டி மாநாடு நடத்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு
ராமநாதபுரம்: -தமிழகத்தில் உள்ள ஒரு லட்சம் மீனவர்களை திரட்டி மாநில மாநாடு நடத்த மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மீனவர் பேரவை தலைவர் அன்பழகனார் தலைமையில் மீனவர்கள் மாநில மாநாடு நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் உப்பூரில் நடந்தது. மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது. மண்டல் கமிஷன் பரிந்துரைகளை செயல்படுத்துவது, மீனவர்களுக்கு அரசியல் கட்சிகள் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குதல் உள்ளிட்ட அரசியல் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு லட்சம் மீனவர்களை திரட்டி மே மாத இறுதிக்குள் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் மத்திய, மாநில அமைச்சர்களை அழைப்பது, ஒரு மீனவர் கிராமத்திலிருந்து 500 பேருக்கும் குறையாமல் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. இதில் தமிழக மீனவர் பேரவை செயலாளர் தாஜூதீன், தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு தலைவர் சின்னதம்பி, ஆனந்த், பேரவை மாவட்ட செயலாளர்கள் வேலாயுதம், ரெய்மெண்ட் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.