கண்மாயில் தேங்கும் தண்ணீரை பயன்படுத்த முடியாத அவலம்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மேலமானாங்கரை கிராம கண்மாய் வரத்து கால்வாய் வழியாக கழிவுநீர் கலப்பதால் தேங்கும் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத அவலநிலை ஏற்படுவதாக விவசாயிகள் கூறினர். மேலமானாங்கரை கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கடலாடி ஒன்றிய கண்மாய் உள்ளது. இதன் மூலம் பருவமழை காலத்தில் தேங்கும் தண்ணீரால் 200 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. பல ஆண்டுகளாக கண்மாய் துார்வாரப்படாமல் இருப்பதால் வரத்து கால்வாய்கள் மணல் மேடாகியும், சீமைக் கருவேலம் மரங்கள் வளர்ந்து புதர்மண்டி உள்ளது. தற்போது பருவ மழைகாலத்தில் பெய்த மழையால் மேலமானாங்கரை கண்மாயில் ஓரளவு தண்ணீர் தேங்கியுள்ளது. கண்மாய் தண்ணீரில் கழிவுநீர் கலந்திருப்பதால் தேங்கியுள்ள தண்ணீரை பயன்படுத்த முடியாத அவலநிலை உருவாகியுள்ளது. விவசாயிகள் கூறியதாவது: மேலமானாங்கரை கிராமத்தில் கண்மாயில் தேங்கும் தண்ணீரை பயன்படுத்தி நெல், மிளகாய் விவசாயம் செய்கின்றனர். அவ்வப்போது பெய்த மழையால் நெற்பயிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. சில நாட்களாக மழை பெய்யாததால் பயிர் களுக்கு தேவையான தண்ணீர் இல்லாமல் வறண்டுள்ளது. கண்மாயில் தேங்கியுள்ள தண்ணீரில் கழிவுநீர் கலந்திருப்பதால் தண்ணீரை பயன்படுத்த முடியாத அவலநிலை உருவாகியுள்ளது. தண்ணீர் இருந்தும் பயனில்லை. விவசாயம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. வரும் நாட்களில் தண்ணீரில் கழிவுநீர் கலப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து கண்மாயில் கழிவுநீர் கலக்காமல் தடுக்கவும், வரும் காலங்களில் கண்மாயில் மராமத்து பணி செய்யவும், விவசாயத்திற்கு முழுமையாக தண்ணீரை பயன்படுத்துவதற்கு வரத்து கால்வாய் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.