நகராட்சியில் சுகாதார அலுவலர் இன்ஜினியர் பணியிடம் காலி துப்புரவு, மேம்பாட்டு பணிகள் மந்தம்
பரமக்குடி: பரமக்குடி நகராட்சியில் சுகாதார அலுவலர் மற்றும் இன்ஜினியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், தூய்மை பணிகள் உட்பட மேம்பாட்டு பணிகள் மந்தமாக நடக்கிறது.பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகளில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வணிக நிறுவனங்கள், மகால்கள், லாட்ஜ், மருத்துவமனைகள் அதிகரித்துள்ளன. நாள் ஒன்றுக்கு 34.4 டன் குப்பை சேகரிக்கப்படும் நிலையில், 21 டன் மக்கும் குப்பை, 8 டன் பிளாஸ்டிக் குப்பை என பெறப்படுகிறது. மற்றவை மண் மற்றும் பயன்படுத்த முடியாத கழிவுகளின் கலப்பாக இருக்கிறது. தற்போது 36 நிரந்தர துப்புரவு பணியாளர்களும், 188 ஒப்பந்த பணியாளர்களும் உள்ளனர். இவர்களால் ஒட்டுமொத்த பரமக்குடியின் குப்பையை முறையாக சீர் செய்ய முடியாமல் உள்ளனர். கடந்த 8 மாதங்களுக்கு மேலாக சுகாதார அலுவலர் மற்றும் நகராட்சி இன்ஜினியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது. தொடர்ந்து சுகாதார ஆய்வாளர் பணியில் 4 பேர் இருந்த நிலையில் தற்போது இருவர் மட்டுமே உள்ளனர். இதனால் வாறுகால்களை முறையாக சுத்தம் செய்ய முடியாமல், கொசு உற்பத்தியாகி, துர்நாற்றத்தில் மக்கள் தொற்று பீதிக்கு ஆளாகின்றனர். ஆகவே வரும் நாட்களில் நகராட்சியின் தரத்தை உயர்த்துவதுடன், அனைத்து பணியிடங்களையும் நிரப்பி, நகரை துாய்மையாக வைத்திருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.