வரைபடத்தில் இருந்து காணாமல் போகும் வேந்தோணி கால்வாய்; விவசாயிகள் வேதனை
பரமக்குடி; பரமக்குடி வழியாக செல்லும் பிரதான கால்வாய்கள் குப்பை கொட்டப்பட்டு சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து காணாமல் போய் வருவதால் விவசாயிகள் வேதனையுடன் உள்ளனர். மாவட்டத்திற்கு தேவையான தண்ணீர் வலது, இடது பிரதான கால்வாய்கள் மூலம் பிரித்து கொடுக்கப்படுகிறது. வைகை ஆறு வழியாக ராமநாதபுரம் பெரிய கண்மாய் நோக்கி தண்ணீர் செல்லும் நிலையில் பரளை கால்வாய் மூலம் முதுகுளத்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் வலது பிரதான கால்வாய் பரமக்குடி வழியாக செல்கிறது. இப்பகுதியில் ஒட்டுமொத்தமாக கழிவுநீர் கலக்கும் சூழலில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்துள்ளது. வேந்தோணி ரயில்வே கேட் ஒட்டிய இடங்களில் குப்பை, இளநீர் கழிவுகள் ஏராளமாக கொட்டி கால்வாயின் தடம் மறைந்து வரைபடத்தில் இருந்து காணாமல் போகும் நிலை உள்ளது. இதனால் பல்வேறு கிராமங்களுக்கு தண்ணீர் செல்லும் காலங்களில் முறையாக நீர் கிடைக்காமல் உள்ளதுடன், கழிவு நீர் கலந்து விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்த முடியாத சூழல் உண்டாகிறது. ஆகவே கால்வாய் பகுதிகளை முறைப்படுத்த பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.