பாடத்திட்டம் இல்ல..புத்தகமும் இல்ல.. தேர்வு மட்டும் உண்டுங்க... கல்வித்துறையில் இது தான் இப்போ புதுசுங்கோ
ராமநாதபுரம்: -தமிழக பள்ளிக்கல்வித்துறையில் உடற்கல்விக்கு பாடத்திட்டம் கிடையாது. புத்தகமும் இல்லை. பெரும்பாலான பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களும் இல்லை. ஆனால் தேர்வு மட்டும் நடத்தப்படுகிறது. விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தினமும் புதிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிடுகிறது. விளையாட்டுத் துறைக்கு என அமைச்சராக துணை முதல்வர் உதயநிதி இருக்கிறார். தமிழகம் விளையாட்டின் தலைநகரம் என்ற அறிவிப்பும் செய்கின்றனர். பள்ளிக் கல்வித் துறையில் உண்மையில் இதற்கு நேர் மாறாக நடக்கிறது. ஆண்டு தோறும் 6, 7, 8, 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உடற்கல்வித் தேர்வு மட்டும் நடத்தப்படுகிறது. இதற்கென பாடத்திட்டம் இல்லை. புத்தகமும் இல்லை. அரசு நடுநிலைப்பள்ளிகளில் 90 சதவீதம் உடற்கல்வி ஆசிரியர்களும் இல்லாத நிலையில் உடற்கல்வித்தேர்வு மட்டும் நடத்தப்படுகிறது. உடற்கல்வியின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்போதுள்ள மாணவர்கள் உடல் உழைப்பு, விளையாட்டு இல்லாமல் அலைபேசியில் முழு கவனத்தையும் திருப்பி வருகின்றனர்.இந்நிலையில் பள்ளிகளில் உடற்கல்விக்கு உரிய முக்கியத்துவம் அளித்து மாணவர்களின் வளர் இளம் பருவத்தில் அவர்களுக்கான உடல் நலத்தையும் காக்க பள்ளிக்கல்வித்துறை முன் வர வேண்டும்.