பரமக்குடி மினி விளையாட்டு அரங்கில் பயிற்சிக்கு டிராக், கோச்சும் இல்லை: வீரர்கள் குற்றச்சாட்டு
பரமக்குடி: பரமக்குடி மினி விளையாட்டு அரங்கம் டிராக் சீரமைக்கப்படாத நிலையில், கோச்சும் முறைப்படுத்தப்படவில்லை என விளையாட்டு வீரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பலர் தனியார் மையங்களில் பயிற்சி மேற்கொள் கின்றனர். பரமக்குடி நகராட்சி சந்தை திடலில் 2007 ஜன.30ல் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் ரூ.30 லட்சத்தில் மினி விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது. ராமநாதபுரத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் பிரம்மாண்டமான 400மீ., டிராக், ஹாக்கி, கால்பந்து மைதானங்கள் மற்றும் வீரர்களுக்கான தங்கும் அறை அமைக்கப்பட்டது. பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளும் நடந்தது. கடந்த 10 ஆண்டுகளாக டிராக் முழுவதும் சேதமடைந்து மழை காலங்களில் குளமாகி விடுகிறது. மேலும் காம்பவுண்ட் சுவர்கள் உடைந்து, கழிப்பறைகள் சேதமாகி இருக்கிறது. இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் விளையாட்டு வீரர்களுடன் இணைந்து தொடர்ந்து சுட்டி காட்டி வந்தது. தற்போது காம் பவுண்ட் சுவர் அமைக்கும் பணி நடக்கிறது. இருப்பினும் அருகில் நகராட்சி சந்தை வளாகம் உயர்த்தி கட்டப்பட்டு பணிகள் நடக்கிறது. இதேபோல் அனைத்து வீடுகளும் 5 அடி வரை உயர்த்தப்பட்ட நிலையில் நடுவில் இருக்கும் மைதானம் பள்ளமாகவே இருக்கிறது. இச்சூழலில் எந்த வகையான விளையாட்டு பயிற்சிகளும் மேற்கொள்ள முடியாமல் உள்ளதுடன், பயிற்சியாளர்களும் முறையாக இருப்பதில்லை என வீரர்கள் குற்றம் சாட்டு கின்றனர். இதனால் பரமக்குடியில் தடகளம் உள்ளிட்ட அனைத்து வகையான விளையாட்டு வீரர்களும் தனியாக பயிற்சி மேற்கொண்டு சாதிக்கின்றனர். ஆகவே அரசு நிதி யுடன் மினி விளையாட்டு அரங்கத்தை மேம்படுத்தி, பயிற்சியை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் கூறுகையில், பரமக்குடி மினி விளையாட்டு அரங்கத்தில் ஒரு கோச் பணியில் உள்ளார். மைதானத்தின் பள்ளத்தை மண்கொட்டி விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.