திருப்புல்லாணி கோயிலில் ரூ.1 கோடி நகை மாயம் ஸ்தானிகர் நீதிமன்றத்தில் சரண்
ராமநாதபுரம் :ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி ஆதி ஜெகநாதபெருமாள் கோயிலில் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் மாயமான வழக்கில் ஸ்தானிகர் சீனிவாசன் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து போலீசார் தேடிய நிலையில் 2வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று சரணடைந்தார். பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.இக்கோயிலில் ரூ.1 கோடி நகைகள் மாயமானது குறித்து திவான் பழனிவேல் பாண்டியன் புகாரில் குற்றப்பிரிவு போலீசார் நகைகளின் பொறுப்பாளரான சீனிவாசன் மீது வழக்குப்பதிந்து விசாரித்தனர். ஸ்தானிகர் மற்றும் அவருடன் பணியாற்றிய அனைத்து பணியாளர்களிடமும் விசாரணை நடத்தினர்.சீனிவாசன் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி மனு செய்தார். மனு தள்ளுபடியானது. உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் முன் ஜாமின் மனு செய்தார். அவருக்கு நீதிபதி இடைக்கால முன் ஜாமின் வழங்கினார். விசாரணைக்கு ஒத்துழைக்கவும், மோசடி தொடர்பாக சிறப்பு ஆணையம் அமைத்தும் நீதிபதி உத்தரவிட்டார். அதில் சீனிவாசன் 139 கிராம் தங்க நகைகளையும், 498 கிராம் வெள்ளி நகைகளையும் ஒப்படைத்தார். இதுகுறித்து ஆணையம் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சீனிவாசனுக்கு வழங்கிய இடைக்கால முன் ஜாமினை ரத்து செய்தது. இரண்டாவது முறையாக சீனிவாசன் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் முன் ஜாமின் மனு செய்தார். அம்மனுவும் தள்ளுபடியானது.சீனிவாசனை கைது செய்ய போலீசார் தேடிய நிலையில் நேற்று ராமநாதபுரம் 2வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார். மாஜிஸ்திரேட் (பொறுப்பு) வெர்ஜின் வெஸ்டா 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சீனிவாசன் சிறையில் அடைக்கப்பட்டார்.