திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலத்தில் அதிக விபத்து: 3 நாட்களில் 6 பேர் பலி
திருவாடானை: திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 3 நாட்களில் 6 பேர் பலியாகியுள்ளனர். திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை, ராமநாதபுரம்- தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. குறிப்பாக டூவீலர்களில் செல்பவர்களே அதிகளவில் பாதிப்பை எதிர்கொள்கின்றனர். திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து உயிர் பலியும் அதிகமாக நடக்கிறது. கடந்த 22 முதல் 24 வரை மூன்று நாட்களில் டூவீலர் உள்ளிட்ட பல்வேறு விபத்தில் ஆர்.எஸ்.மங்கலம் பாலமுருகன் 33, இந்திரா நகர் மகிம் 22, காரங்காடு ஆன்ட்ரூஸ் நியுட்டன் 61, ஆர்.எஸ்.மங்கலம் நிறையரசு 70, வென்னியூர் செல்வகுமார் 35, ஆர்.எஸ்.மங்கலம் மனோஜ்குமார் 40, ஆகியோர் இறந்துள்ளனர். 3 நாட்களுக்குள் 6 பேர் இறந்தது அதிர்ச்சியாக உள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பொதுவாக மனித தவறுகள், போதையில் வாகனம் ஓட்டுவது, அதிக வேகம், தவறான பாதையில் செல்வது, பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விபத்துகள் அதிகமாக நடக்கிறது. போதிய விழிப்புணர்வு இல்லாததே விபத்திற்கு காரணமாக அமைகிறது. 18 வயதிற்கு கீழ் மாணவர்கள் பெற்றோரிடம் வற்புறுத்தி அதிக குதிரை திறன் உள்ள டூவீலர்களை இயக்கி விபத்திற்கு உள்ளாவதும் அதிகரிக்கிறது. அனைவரும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி விபத்துகள் நடக்கும் பகுதிகளில் சாலை மேம்பாட்டு பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்தலாம். சாலை விதிகளை பின்பற்றாதவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.