தள்ளு மாடல் வண்டியாக மாறிய டவுன் பஸ்
ராமநாதபுரம் : -ராமநாதபுரம் பழைய பஸ்ஸ்டாண்டில் அரசு போக்குவரத்துக்கழக டவுன் பஸ் பழுதாகி நின்றதால் வேறு வழியின்றி பயணிகளும் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களும் பஸ்சை தள்ளிக் கொண்டு டிப்போவிற்கு சென்றனர்.அரசு போக்குவரத்துக்கழகங்களில் இயக்கப்படும் பெரும்பாலான பஸ்களில் தொடர்ந்து பழுது ஏற்படுகிறது. சரியாக உதிரி பாகங்கள் வாங்கி பஸ்களை பராமரிப்பு செய்யாததால் கண்ட இடங்களில் பழுது ஏற்பட்டு நிற்கின்றன. நேற்று ராமநாதபுரத்தில் இருந்து சத்திரக்குடி, முத்துசெல்லாபுரம், செம்பொன்குடி வழியாக கொளுந்துறை செல்லும் டவுன் பஸ் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பழுதாகி நின்றது. இதனால் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதையடுத்து அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேறு வழியின்றி டவுன் பஸ்சை தள்ளி கொண்டு போய் எதிரில் உள்ள பஸ்கள் பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதியில் கொண்டு போய் சேர்த்தனர். இதனால் அப்பகுதியில் 30 நிமிடத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகத்தினர் தேவையான உதிரி பாகங்கள் வழங்கி முறையாக பஸ்களை பராமரிக்க வேண்டும். இப்படி கண்ட இடங்களில் பஸ்கள் பழுதாவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.