காத்தாகுளத்தில் ஆபத்தான நிலையில் டிரான்ஸ்பார்மர்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே காத்தாகுளத்தில் டிரான்ஸ்பார்மர் சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதால் மக்கள் அச்சப்படுகின்றனர். முதுகுளத்துார் அருகே காத்தாகுளம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு முதுகுளத்துார் துணைமின் நிலையத்திலிருந்து மின் சப்ளை செய்யப்படுகிறது. கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு டிரான்ஸ்பார்மர், மின்கம்பம் அமைக்கப்பட்டது. தற்போது ஆங்காங்கே சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. பா.ஜ., முன்னாள் ஒன்றிய பொதுச் செயலாளர் சேதுராமன் கூறியதாவது: காத்தாகுளம் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர், மின்கம்பம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மின்கம்பம் விரிசலடைந்திருப்பதால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே கிராமத்தில் டிரான்ஸ்பார்மர், புதிய மின்கம்பம் அமைக்கவில்லை எனில் கிராம மக்களை ஒன்று திரட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்றார்.