தமிழகத்துக்குள் சட்ட விரோதமாக ஊடுருவ முயன்றகுற்றப்பின்னணி கொண்ட இலங்கையர் இருவர் கைது
ராமநாதபுரம்:தமிழகத்திற்கு கடல் வழியாக சட்ட விரோதமான முறையில் ஊடுருவ முயன்ற குற்றப்பின்னணி கொண்ட இலங்கையை சேர்ந்த இருவரை அந்நாட்டு கடற்படையினர் கைது செய்தனர். ராமநாதபுரம்மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள தனுஷ்கோடி கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்திவர இருப்பதாகவும், அதனை வாங்கி செல்லஇலங்கை தலைமன்னாரிலிருந்து பைபர் படகில் நான்கு பேர்நேற்று முன் தினம் மாலை வர இருப்பதாக இலங்கை கடற்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்துமன்னார் கடற்பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் இருந்து நான்கு பேர் பைபர் படகில் புறப்பட்டு சென்றதை பார்த்து மடக்கிப் பிடித்து விசாரித்தனர். இதில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இம்மானுவேல் மிஸ்பா 40, கொழும்பு துறையை சேர்ந்த அஜித்தன் 36, இருவரும் கடல் வழியாக தமிழகம் வந்து இங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல இருந்தது தெரிய வந்தது. இவர்கள் இருவர் மீதும் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல இருந்தது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த இலங்கை கடற்படையினர் தலைமன்னார் போலீசில் ஒப்படைத்தனர். இவர்களை தமிழகத்திற்கு அழைத்துச்செல்ல முயன்ற மன்னார் பகுதியை சேர்ந்த படகோட்டிகள் இருவரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மீது தனி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.இம்மானுவேல் மிஸ்பா அலைபேசியில் இருந்து தமிழகத்தை சேர்ந்த ஒருவரின் அலைபேசி எண்ணை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர் அதை தொடர்பு கொண்டு பேசினார். இலங்கையில் இருந்து பைபர் படகில் தமிழகத்திற்குள்ஊடுருவ இருந்த இம்மானுவேல் மிஸ்பா மற்றும் அஜித்தன் ஆகிய இருவரையும் தமிழக கடல் பகுதியில்வைத்து அழைத்துச் செல்ல இருப்பது தெரியவந்தது. அந்த அலைபேசி எண்ணை வைத்திருப்பவரிடம் விசாரிக்க அதற்கான விபரங்களை ராமநாதபுரம் உளவுத்துறை அதிகாரிகளுக்கு இலங்கை கடற்படையினர் அனுப்பிவைத்துள்ளனர். இது குறித்து மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.