ராமநாதபுரம் கிழக்கு கடற்கரைசாலையில் பராமரிப்பு இல்லாத பாலம்: புதர்மண்டி, இருட்டால் விபத்து அபாயம்
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் வழியாக கீழக்கரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலம் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் அதிகளவில் செடிகள் வளர்ந்துள்ளதால் இரவு நேரத்தில் மின்விளக்குகள் எரியாமல் உள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.ராமநாதபுரம் கிழக்குகடற்கரை சாலை ராமேஸ்வரத்திலிருந்து கீழக்கரை வழியாக துாத்துக்குடி, திருநெல்வேலி, திருச்செந்துார் பகுதிக்கு செல்லும் வாகனங்கள், புதுக்கோட்டையிலிருந்து கிழக்கு கடற்கரைசாலையில் வரும் வாகனங்கள் இந்த மேம்பாலத்தினை பயன்படுத்தி வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணம் செய்யும் இந்த பாலத்தில் நெடுஞ்சாலைத்துறையினர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாமல் பாலத்தின் ரோடுகளில் இரு புறமும் செடிகள் வளர்ந்து புதர் மண்டிய நிலையில் உள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு பாலத்தின் இரு புறங்களிலும் வளர்ந்துள்ள செடிகளை அப்புறப்படுத்த வேண்டும். மின்விளக்குகளும் எரிவது இல்லை, ரோடும் சேதமடைந்துள்ளது. இதனால் இரவு நேரத்தில் பாலத்தில் வரும் வாகனங்கள் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பாலத்தில் மராமத்து பணிகள் மேற்கொள்ளவும், செடி,கொடிகளை அகற்றி, மின்விளக்குகள் எரிவதற்கும் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தர விட வேண்டும்.---