மதுரை-மண்டபம் நெடுஞ்சாலையில் பாதுகாப்பில்லாத பயணம்: பரமக்குடியில் வாகன ஓட்டிகள் அவதி
பரமக்குடி: பரமக்குடி நகர்-மதுரை, மண்டபம் நெடுஞ்சாலையில் முக்கிய சந்திப்பு இடத்தில் சிக்னல் கிடையாது. பெயரளவில் போலீசார் பணியில் ஈடுபடுவதால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்து அச்சத்துடன் வாகன ஓட்டிகள் பாதுகாப்பு இல்லாத பயணம் மேற்கொள்கின்றனர்.மதுரையிலிருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட நிலையில், ஏராளமான வாகனங்கள் சுலபமாக நான்கு வழிச்சாலையில் செல்கிறது. இந்நிலையில் பரமக்குடி தெளிச்சாத்தநல்லுார் தொடங்கி, காட்டுப் பரமக்குடி, ஓட்டப்பாலம், ஐந்து முனை, பஸ் ஸ்டாண்ட் வழியாக அரியனேந்தல் நான்கு வழிச்சாலையை அடைகிறது.தினமும் டூவீலர், ஆட்டோ, பள்ளி வாகனங்கள், அரசு மற்றும் தனியார் சென்னை செல்லும் பஸ்கள் அணிவகுக்கிறது. ஆனால் பஸ் ஸ்டாண்ட், ஆர்ச், ஐந்து முனை என முக்கிய சந்திப்பு இடத்தில் 'சிக்னல்' கிடையாது.குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே போக்குவரத்து போலீசார் நிற்கும்படி உள்ளது. இதனால் ரோட்டில் இரு ஓரங்களிலும் நிறுத்தப்படும் வாகனங்களை மீறி, இரு திசைகளிலும் செல்லும் வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக செல்கின்றன. பரமக்குடி நகருக்குள் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கும் நிலையில், கிராமங்களில் இருந்து வரும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த நெடுஞ்சாலையை பயன்படுத்துகின்றனர்.எனவே போக்குவரத்து நெரிசல், விபத்துக்களை தடுக்க வருவாய், போக்குவரத்து போலீசார் ரோட்டோர ஆக்கிரமிப்பை முறைப்படுத்துவதுடன், சிக்னல் விளக்குகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.