திருவெற்றியூருக்கு கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்
திருவாடானை: திருவெற்றியூருக்கு கூடுதல் பஸ் இயக்க பயணிகள், பக்தர்கள் வலியுறுத்தினர். திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் உள்ளது. வெள்ளி, செவ்வாய் மற்றும் திருவிழாக் காலங்களில் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். திருவாடானையில் இருந்து திருவெற்றியூருக்கு அரசு டவுன் பஸ் மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.இரண்டு மணி நேரம் இடைவெளியில் பஸ்கள் இயங்குவதால் பயணிகள் மற்றும் பக்தர்கள் சிரமம் அடைந்துள்ளனர். இது குறித்து பயணிகள் கூறியதாவது: ஆண்டிவயல், ஆதியூர், குளத்துார், அரும்பூர், புதுப்பையூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக செல்வதால் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். நீண்ட நேரம் இடைவெளியால் பஸ்ஸ்டாண்டில் காத்திருக்க முடியாமல் ஆட்டோவில் செல்வதால் கூடுதல் செலவாகிறது. எனவே அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ் இயக்க போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.