காவிரி பாசன மாவட்டங்களில் அதிக விலைக்கு உரம் விற்பனை வைகை விவசாயிகள் சங்கம் புகார்
ராமநாதபுரம்: காவிரி பாசன மாவட்ட விவசாயிகளுக்கு உரங்கள் அரசு நிர்ணயித்த விலைக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்க தலைவர் பாக்கியநாதன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்கள், கடலுார் மாவட்டங்களில் விவசாய பணிகள் ஆறு லட்சம் ஏக்கரில் நடக்கிறது. நெற்பயிர்களுக்கு தேவையான யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்கள் கிடைப்பதில் கடுமையான நெருக்கடி உள்ளது. இதனால் விவசாயத்தில் மகசூல் பணி தொய்வடையவுள்ளது. சில நிறுவனங்கள், இடைத்தரகர்கள் அதிகப்படியான விலைக்கு உரங்களை விற்பனை செய்கின்றனர். ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் விவசாயிகளுக்கு தேவையான உரங்களை சேமித்து வைத்து கையிருப்பை உறுதி செய்கிறது. தமிழகத்தில் அரசு நிர்ணயித்த விலைக்கே உரங்கள், பூச்சி கொல்லிமருந்துகள் மற்றும் அனைத்து உபகரணங்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். உரங்களை கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.