உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் காட்டுபிள்ளையார் கோயிலில் சுற்றுச்சுவர் அமைக்க வி.எச்.பி., கோரிக்கை

ராமேஸ்வரம் காட்டுபிள்ளையார் கோயிலில் சுற்றுச்சுவர் அமைக்க வி.எச்.பி., கோரிக்கை

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் காட்டுபிள்ளையார் கோயில் முன்பு நிறுத்தும் வாகனங்களை அகற்ற சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு வி.எச்.பி., யினர் தெரிவித்தனர். ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் ராமநாதசுவாமி கோயில் உபகோயிலான காட்டுபிள்ளையார் கோயில் உள்ளது. இக்கோயிலில் ரூ.20 லட்சத்தில் திருப்பணிகள் துவக்க செப்., 14ல் பாலாலயம் பூஜை நடந்தது. பழமையான இக்கோயில் முன்புள்ள காலி இடத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு பனைமட்டையில் பாதுகாப்பு வேலி இருந்தது. இதனால் இங்கு தனியார் வாகனங்கள் நிறுத்துவது தடுக்கப்பட்டது. காலப்போக்கில் பனை மட்டை வேலி சேதமடைந்ததால் புதிய சுற்றுச்சுவர் அமைக்க கோயில் நிர்வாகம் முன்வரவில்லை. இதனால் தற்போது தனியார் வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமித்தும், இரவில் குடிமகன்கள் ரகளை செய்வதும் வழக்கமாக உள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு வி.எச்.பி., ராமநாதபுரம் மண்டல அமைப்பாளர் சரவணன் கூறியதாவது: பாரம்பரியமான காட்டுப்பிள்ளையார் கோயிலில் முன்பு தனியார் வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிக்கின்றனர். இதனால் கோயிலுக்கும், பக்தர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. தற்போது துவங்கிய திருப்பணியுடன், சுற்றுச்சுவரையும் கட்டி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்றார். இதுகுறித்து கோயில் ஊழியர் கூறுகையில், இக்கோயிலில் திருப்பணி, கும்பாபிஷேகம் முடிந்ததும், திட்ட மதிப்பீடு தயார் செய்து விரைவில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ