பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க விஷ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்
திருவாடானை: பொன்முடி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டதால் கைவிடப்பட்டது.ஹிந்து மதத்தையும், பெண்களையும் ஆபாசமாக பேசிய பொன்முடி அமைச்சராக நீடிக்க தமிழகம் முழுவதும் எதிர்ப்பு வலுக்கிறது. இந்நிலையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் நம்புதாளை ரமணன், தொண்டியில் பொன்முடியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்குமாறு மனு கொடுத்தார். உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் மதரீதியான ஆர்பாட்டம் நடத்த போலீசார் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. இது குறித்து ரமணன் கூறியதாவது:தமிழர் வரலாற்றில் தொன்மை வாய்ந்த சைவம் மற்றும் வைணவ சமயங்களை பொதுமேடையில் அநாகரிகமான காமச்சுவையுடன் தரம் தாழ்த்தி விமர்சித்து அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார். விலை மாதுக்கும், வாடிக்கையாளருக்கும் இடையிலான உரையாடலை ஹிந்துக்களின் புனித அடையாளங்களுடன் ஒப்பிட்டு மிகவும் ஆபாசாக பேசியுள்ளார். அந்த பேச்சின் வீடியோ பதிவு தமிழகமெங்கும் பெண்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே பொன்முடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். பொன்முடியை கண்டித்து தொண்டியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் போலீசார் அனுமதி அளிக்க மறுத்தனர். ஆகவே அவர் மீது வழக்குபதிவு செய்ய புகார் அளிக்கப்படும் என்றார்.