ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியின் போது இரட்டைப் பதிவு, இறந்தவர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் என நான்கு சட்டசபை தொகுதிகளிலும் 1 லட்சத்து 17 ஆயிரத்து 364 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இப்பணியின் போது 1200 பேருக்கு ஒன்று வீதம் புதிதாக 140 ஓட்டுச்சாவடிகள் உருவாக்கப்பட்டு தற்போது 1514 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவின் படி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் நவ.,27ல் ராமநாதபுரம் மாவட்டத்தின் நான்கு சட்டசபை தொகுதிகளில் வாக்காளர்கள் விபரப்படி 12 லட்சத்து 8690 பேருக்கு கணக்கீட்டு படிவம் ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலம் நவ.,4 முதல் வழங்கப்பட்டது.
அவற்றை பூர்த்தி செய்து திரும்பப் பெறப்பட்ட படிவங்களின் அடிப்படையில் நேற்று (டிச.,19ல்) ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டார். இதில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியின் போது கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்து மீளப் பெறப்படாத விண்ணப்பங்களில் இறந்தவர்கள்- 51,439, இரட்டைப் பதிவு- 9424, முகவரியில் இல்லாதவர்கள் மற்றும் நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் 56,501 என 1,17, 364 பெயர்கள் அதாவது ஏற்கனவே இருந்த வாக்காளர்களில் 9.71 சதவீதம் பேர் நீக்கப்பட்டனர். அதாவது சட்டசபை தொகுதிகளான பரமக்குடியில் 30,113 பேர், திருவாடானையில் 29,212, ராமநாதபுரத்தில் 25,734, முதுகுளத்துாரில் 32,305 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தற்போது நான்கு சட்டசபை தொகுதிகளிலும் ஆண்கள் 5 லட்சத்து 41 ஆயிரத்து 332 பேரும், பெண்கள் 5 லட்சத்து 49 ஆயிரத்து 939 பேர், திருநங்கைகள்- 55 பேர் என 10 லட்சத்து 91 ஆயிரத்து 326 வாக்காளர்கள் உள்ளனர். இப்பட்டியலை இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.elections.tn.gov.inமற்றும் www.nvsp.in ஆகியவற்றில் பொதுமக்கள் சரிபார்த்துக் கொள்ளலாம். உரிமை கோரல் மற்றும் மேல்முறையீட்டு காலமான டிச.,19 முதல் 2026 ஜன.,18 வரை வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கவும், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தங்கள், புதிய அடையாள அட்டை பெற்றிடவும் மனு செய்து கொள்ள தேர்தல் ஆணையம் கால அவகாசம் வழங்கியுள்ளது. வரும் 2026 பிப்.,17 ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என இந்திய தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது என கலெக்டர் கூறினார். வாக்காளர் வரைபட்டியல் வெளியிட்ட போது அரசியல் கட்சிக்குரிய நகல்கள் வழங்காததால் சில கட்சிப்பிரதிநிதிகள் கூச்சலிட்டனர். அதன் பிறகு கலெக்டர் உத்தரவில் அனைவருக்கும் நகல் எடுத்து வழங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன், தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர்.