இழப்பீடு வழங்காததை கண்டித்து காத்திருப்பு
கடலாடி; கடலாடி தாலுகா அலுவலகம் முன்பு தேசிய வேளாண் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்தும் இழப்பீடு வழங்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து விவசாயிகள் நேற்று காலை முதல் மாலை வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடலாடி தாலுகாவிற்கு உட்பட்ட செவல்பட்டி, உச்சிநத்தம், வி.சேதுராஜபுரம், கொண்டுநல்லான் பட்டி, கொக்கரசன் கோட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த மாதம் பெய்த மழையால் மிளகாய், மல்லி, உளுந்து உள்ளிட்ட சிறு குறு தானியங்கள் பெருமளவில் சேதமடைந்தது.இந்நிலையில் கடந்த 2023, - 2024 ஆண்டுகளில் தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனம் மூலம் தங்களுடைய பயிர்களுக்கு காப்பீடு செய்தும் கடந்த ஆண்டு ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் தாலுகா அலுவலகம் முன்புறம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடலாடி வருவாய்த் துறையினர், போலீசார் போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.