ஊராட்சிகளில் தண்ணீர் வரி வசூல்; சிரமப்படும் ஊராட்சி செயலர்கள்
கடலாடி; திருப்புல்லாணி, கடலாடி, கமுதி ஒன்றிய ஊராட்சிகளில் ஜல்ஜீவன் திட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் முறையாக தண்ணீர் வழங்கப்படாத ஊராட்சிகளில் வரி செலுத்த வேண்டும் என அரசு தரப்பில் நெருக்கடி காட்டுவதால் ஊராட்சி செயலர்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். ஊராட்சி செயலாளர்கள் கூறியதாவது:முன்பு ஊராட்சி தலைவர் மூலமாக வரியினங்கள் வசூலிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பெரும்பாலான ஊராட்சிகளில் பொதுமக்களிடம் வரி செலுத்துமாறு அதிகம் கட்டாயப்படுத்தாத நிலையால் தற்போது தனி அலுவலர் காலக்கட்டத்திலும் அதே நிலை தொடர்கிறது.ஊராட்சியில் உள்ள வீடுகளில் மக்கள் வசிக்காவிட்டாலும் அவர்களுக்கான வரிகளை செலுத்துவது கட்டாய நடவடிக்கையில் ஒன்றாக இருப்பதால் பெரும்பாலான ஊராட்சி செயலர்கள் தங்களது சொந்த பணத்தை செலுத்தி கணக்கை நிவர்த்தி செய்து கொள்கின்றனர்.ஊராட்சிகளில் குடிநீர் வரி, சொத்து வரி, தொழில்வரி உள்ளிட்டவைகளை குறிப்பிட்ட காலத்தில் செலுத்துமாறு அரசு கெடு விதிக்கும் நிலையில் வசூலிப்பதற்காக தீவிரமாக தயாராகி வருகிறோம். ஒரு சில இடங்களில் தண்ணீர் வராத இடங்களில் குடிநீர் வரி கேட்கும் போது பொதுமக்களிடமிருந்து கேள்விகள் எழுப்பப்படுகிறது.எனவே சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களின் ஒத்துழைப்பு இவ்விஷயத்தில் முக்கிய தேவையாக உள்ளது என்றனர்.