கோடை நெல் சாகுபடியை காப்பாற்ற டீசல் மோட்டாரில் தண்ணீர் பாய்ச்சல்
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கோடை நெல் விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் டீசல் மோட்டார் வைத்து தண்ணீர் பாய்ச்சும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பாசனத்தின் கீழ் உள்ள பகுதிகளான இருதயபுரம், பொட்டக்கோட்டை, பனிக்கோட்டை, நெடும்புளிக்கோட்டை, பிச்சனார்கோட்டை, புலிவீர தேவன் கோட்டை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் 300 ஏக்கரில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நெற்பயிர்கள் மகசூல் நிலையை எட்டியுள்ளதால் அதிக அளவில் தண்ணீர் தேவைப்படும். ஆனால் தற்போது வறட்சியால் பெரிய கண்மாயில் தேங்கி இருந்த தண்ணீர் வற்றி மிகவும் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே உள்ளது. கோடை நெல் சாகுபடிக்கு இன்னும் 15 நாட்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது.இதனால் கண்மாயில் பள்ளங்களில் உள்ள தண்ணீரை டீசல் மோட்டார் வைத்து நெல் வயல்களுக்கு விவசாயிகள் பாய்ச்சி வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதால் பாதிப்படைந்துள்ளனர்.