அறிவு சார் மைய டிஜிட்டல் நுாலகம் பரமக்குடியில் திறப்பது எப்போது போட்டித்தேர்வு மாணவர்கள் ஏக்கம்
பரமக்குடி: பரமக்குடியில் கட்டப்பட்டு வரும் அறிவுசார் மைய டிஜிட்டல் நுாலகம் பணிகள் 2 ஆண்டுகளைக் கடந்தும் ஆமை வேகத்தில் நடப்பதால் போட்டி தேர்வர்கள், மாணவர்கள் ஏக்கத்தில் உள்ளனர்.பரமக்குடி நகராட்சி சார்பில் மணி நகர் பகுதியில் உள்ள பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அறிவு சார் மையம் டிஜிட்டல் நுாலக கட்டுமானப் பணிகள் நடக்கிறது. ரூ.1.80 கோடி மதிப்பில் பணிகள் 2023 ஏப்., மாதம் துவங்கியது. நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் நடக்கும் இந்த நுாலகத்தில் சிறுவர்களுக்கான நவீன வாசிப்பு அறைகள் செயல்பட உள்ளது. மேலும் பொது வாசிப்பு அறை, ஆன்லைன் நுாலகங்கள், பயிற்சி வளாகம், இலவச வைபை, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் உட்பட கழிப்பறைகளுடன் அமைக்கப்படுகிறது.இங்கு டிஜிட்டல் முறையில் புத்தகங்களை வாசிப்பதுடன், பொது அறிவு தகவல்களை திரட்டவும் முடியும். இந்நிலையில் பணிகள் துவங்கி இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையில் முழுமை பெறாமல் உள்ளது.இதனால் மத்திய, மாநில அரசுக்கான போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். மேலும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் நுாலகம் திறப்பு குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர்.ஆகவே அறிவு சார் மைய நுாலக பணிகளை வேகப்படுத்தி விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.