கலெக்டர் அலுவலகத்தில் துறைகள் எங்கே... ; வரைபடத்துடன் அறிவிப்பு பலகை அவசியம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்கள் செயல்படுகின்றன. வெளியூர் அலுவலர்கள், பொதுமக்கள் செல்ல வேண்டிய அலுவலகம் எங்கு உள்ளது என்பது குறித்து தெளிவான அறிவிப்பு பலகை இல்லாததால் நீண்ட நேரம் தேடி அலையும் பரிதாப நிலை உள்ளது.ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சி சேதுபதிநகரில் உள்ள பழைய, புதிய கலெக்டர் அலுவலகம் கீழ்தளம், மேல் தளத்தில் கலெக்டர் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலர், கூடுதல் கலெக்டர், துணை கலெக்டர்கள், தேர்தல் பிரிவு, மக்கள் தொடர்பு மையம், மூன்று மாவட்டங்களுக்குரிய ஆவண ஆய்வுக்குழு அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம், மகிளா நீதிமன்றம், ஆதார் புகைப்பட மையம், இ-சேவை மையம், மத்திய கூட்டுறவு வங்கி உள்ளன.இதுபோக வளாகத்தில் விளையாட்டு அரங்கம், நீச்சல்குளம், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், வேளாண் இணை இயக்குனர் அலுவலகம், மகளிர் திட்டம், உணவு பாதுகாப்புதுறை, மீன்வளத்துறை, மாற்றுதிறனாளிகள் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, மாவட்ட தொழில் மையம். டி.ஐ.ஜி., எஸ்.பி., அலுவலகங்கள் என பல்வேறு துறை அலுவலகங்கள் தனித்தனியாக செயல்படுகின்றன. இங்கு தினமும் ஏராளமான வெளியூர் பணியாளர்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அந்தந்த அலுவலகங்களுக்கு செல்வதற்கு போதிய வழிகாட்டுதலின்றி வேறு அலுவலகங்களுக்கு சென்று நீண்ட நேரம் அலைந்து சிரமப்படுகின்றனர். மேலும் போதிய கழிப்பறை, குடிநீர் வசதி இல்லாமல் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே துறைகள் வாரியான தகவல் பலகைகளை புதுப்பித்தும், கலெக்டர் அலுவலக நுழைவுப்பகுதி, புதிய, பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் எந்தெந்த துறைகள் செயல்படுகிறது என்பது குறித்து தெளிவான வரைப்படத்துடன் கூடிய அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். அதற்கு புதிய கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.