ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்ட விவசாயத்தை சீரழிக்கும் காட்டுப்பன்றிகள்
பரமக்குடி: 'ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் விவசாயத்தை அழிக்கும் காட்டுப்பன்றிகள் தற்போது மனிதர்களையும் தாக்க துவங்கியுள்ளன. எனவே அவற்றை கட்டுப்படுத்த வேண்டும்,' என, இம்மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தினர்.பத்தாண்டுகளுக்கு முன்பு வரை இம்மாவட்டங்களில் அறியப்படாத விலங்காக இருந்த காட்டுபன்றிகள் தற்போது அதிகளவில் உலா வருகின்றன.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, கமுதி, நயினார்கோவில் பகுதிகளில் நெல், கரும்பு, விருது நகர் மாவட்டத்தில் பரவலாக கடலை, கரும்பு, சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான நெல் பயிரிடப்படுகிறது. இந்த விளை நிலங்களை காட்டு பன்றிகள் அழித்து வருகின்றன. முக்கியமாக ஆறு, கண்மாய்களில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்துள்ளதால் காட்டுப்பன்றிகள், மான்கள் அதிக அளவில் பெருகியுள்ளன.இதுகுறித்து பரமக்குடியில் காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்பு கால்வாய் நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் மலைச்சாமி கூறியதாவது: கடலை, கரும்பு பயிர்களை விவசாயிகள் பாதுகாத்து வளர்த்தாலும் அறுவடை நேரங்களில் காட்டுப்பன்றிகள் தாக்குவதால் சேதமடைந்து ரூ.பலஆயிரம் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.காட்டுபன்றிகள் மனிதர்களை தாக்குவதால் கமுதி, பரமக்குடியில் பலர் விவசாயத்தை கைவிட்டுள்ளனர். மேலும் சீமை கருவேல மரங்களை வெட்டாமல் விடுவதால் அவ்விடங்களில் காட்டு விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கேரள மாநிலத்தில் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பட்டியலில் காட்டுப்பன்றி இல்லாதது போல், தமிழக அரசும் அப்பட்டியலில் இருந்து விடுவிக்க வேண்டும். இது குறித்து பல முறை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தும் வனம், வருவாய், வேளாண் துறையினர் நடவடிக்கையும் எடுப்பதில்லை. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார்.