உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் விளைநிலங்களை அழித்து விமான நிலையமா: த.வி.ச., மாநில பொதுச் செயலாளர் எதிர்ப்பு

ராமநாதபுரத்தில் விளைநிலங்களை அழித்து விமான நிலையமா: த.வி.ச., மாநில பொதுச் செயலாளர் எதிர்ப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பல ஆயிரம் தென்னை, பனை மரங்கள் உள்ள விவசாயம் நடைபெறும் கும்பரம் கிராமத்தில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில பொதுச்செயலாளர் சாமி நடராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது : மண்டபம் ஊராட்சி ஒன்றியம் கும்பரம் ஊராட்சியில் விமான நிலையம் அமைக்க 530 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இப்பகுதியில் பல ஆயிரக்கணக்கான தென்னை, பனை மரங்கள் உள்ளன. ஆண்டு தோறும் கடலை, நெல், உளுந்து சாகுபடியும் நடக்கிறது. நிலத்தடி நீர் 20 அடியிலேயே கிடைக்கிறது. பத்து கிராமங்களை சேர்ந்த பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். விவசாயத்தை அழித்து விமான நிலையம் அமைக்கக் கூடாது. ராமநாதபுரத்திற்கு விமான நிலையம் வேண்டாம் எனக்கூறவில்லை. இம்மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கரில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. விவசாயம் பாதிக்கப்படா வகையில் அங்கு விமான நிலையம் அமைக்க வேண்டும். கும்பரத்தில் நில எடுப்பு நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். அதையும் மீறி கும்பரத்தில் நிலத்தை கைப்பற்ற நினைத்தால் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துார் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடுகிறோமோ, அதைப்போன்று விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !