பேய் வலைகளை சேகரிக்க மீனவர்களுக்கு மரப்பெட்டி
ராமேஸ்வரம்: கடலில் மிதக்கும் பேய் வலைகளை சேகரிக்க ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மரப்பெட்டி வழங்கப்பட்டது.ஐ.நா., சபையின் மேம்பாட்டு திட்டத்தில் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் உள்ள சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கடலில் மீனவர்கள் வீசும் கழிவு வலைகள், கயிறுகளில் சிக்கும் ஆமை, டால்பின், கடல்பசு உள்ளிட்ட அரிய வகை மீன்களின் உயிர்களுக்கும் ஆபத்து உள்ளதால் இவற்றை சேகரித்து கரைக்கு கொண்டுவர வேண்டும் என மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பேய் வலை என்றழைக்கப்படும் கழிவு வலைகள், கயிறுகளை நடுக்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் அதனை சேகரித்து கரைக்கு கொண்டு வர நேற்று சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் வேல்விழி, தங்கச்சிமடத்தில் 60 படகுகளின் உரிமையாளர்களுக்கு மரபெட்டிகள் வழங்கினார். மீனவர் சங்கத் தலைவர்கள் சகாயம், எமரிட், ஜாகிர்உசேன், முகமது சுல்தான் உட்பட பலர் பங்கேற்றனர்.