மனைவி சமாதியுடன் சேர்த்து வீடு கட்டி வாழும் பாச கணவர்
ராணிப்பேட்டை: மனைவி நினைவாக, அவரது சமாதியுடன் சேர்த்து வீடு கட்டி வாழும் கணவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ராணிப்பேட்டை மாவட்டம், துறையூர் கிராமத்தை சேர்ந்த கட்டட கான்ட்ராக்டர் பழனி, 52. இவரது மனைவி செல்வி, 50; மகள் நிஷானி.மகளுக்கு திருமணமாகி விட்டது. கடந்தாண்டு மார்ச் 5ல் உடல் நலம் பாதிக்கப்பட்டு செல்வி உயிரிழந்தார்.தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மனைவியை அடக்கம் செய்து, அவருக்கு சமாதி கட்டினார்.மனைவி உயிருடன் இருந்தபோது, ஓர் அழகிய தனி வீடு கட்ட ஆசைப்பட்டார். இதை நிறைவேற்றும் விதமாக மனைவியின் சமாதி, வீட்டுக்குள் அமையுமாறு வடிவமைத்து வீடு கட்டினார். அந்த சமாதி அருகே படுக்கையறை மற்றும் சமையலறை கட்டிஉள்ளார். மனைவி இறந்த நாளான மார்ச், 5ல் கிரஹபிரவேஷம் செய்தார்.பழனி கூறுகையில், ''செல்வியின் உடல் மட்டும் தான் இந்த மண்ணுக்குள் சென்றது. ''அவருடைய நினைவுகள் எப்போதும் என்னுடன் தான் உள்ளன,'' என்று கண்ணீர் மல்க உருக்கமாக கூறினார். விவாகரத்துக்கள் பெருகிவிட்ட இக்காலத்தில், மனைவியின் சமாதியை சுற்றி, வீடு கட்டி வாழும் பழனியின் செயல், கிராம மக்களை நெகிழ வைத்துள்ளது.