கூட்டு பலாத்கார குற்றவாளி இருவருக்கு 20 ஆண்டு சிறை
ராணிப்பேட்டை:அரக்கோணம் அருகே, சிறுமி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில், இருவருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுமிக்கு, 2021 டிச.,ல் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்து சென்று பெற்றோர் பரிசோதனை செய்ததில், ஆறு மாத கர்ப்பமாக இருந்தார். சிறுமியின் தாயார் அளித்த புகாரின்படி, அரக்கோணம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர்.அப்பகுதியைச் சேர்ந்த சிலர், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக இரு சிறுவர் உட்பட, 10 பேரை மகளிர் போலீசார், 'போக்சோ'வில் கைது செய்தனர்.சிறுவர்கள் மீதான வழக்கு விசாரணை, வேலுார் சிறார் நீதிமன்றத்தில் நடக்கிறது. மற்ற எட்டு பேர் மீதான விசாரணை, ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்தது.மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வம் வழக்கை விசாரித்து, முக்கிய குற்றவாளிகளான ஜானகிராமன், 26, மூர்த்தி, 25, ஆகியோருக்கு தலா, 20 ஆண்டு சிறை மற்றும் தலா, 10,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மற்ற ஆறு பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.