கார்த்திகை திருவிழா 17ல் துவக்கம் சோளிங்கரில் ஏற்பாடு தீவிரம்
சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில். நரசிம்ம சுவாமி யோக நிலையில் இங்கு அருள்பாலித்து வருகிறார். யோக நிலையில் உள்ள சுவாமியை தரிசனம் செய்யும் பக்தர்களின் வேண்டுதலை, அனுமன் கேட்டு நிறைவேற்றுவார் என்பது ஐதீகம்.தவநிலையில் உள்ள யோக நரசிம்மர், கார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதனால், கார்த்திகை மாதத்தில் வாரம்தோறும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு சிறப்பு தரிசனம் நடக்கிறது.வரும் 17 ம் தேதி துவங்கும் கார்த்திகை உற்சவம், டிச., 20ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், பெரிய மலை மற்றும் அனுமன் அருள்பாலிக்கும் சின்னமலையில் விழா ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. வழக்கமாக ரோப்கார் வழியாக தரிசனம் செய்ய பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிந்து வரும் நிலையில், ரோப்கார் வளாகத்தை ஒட்டி, வாகன நிறுத்தம் பகுதியில் புதர்களை அகற்றி சுத்தம் செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தக்கான் குளக்கரை, கொண்டபாளையம், பக்தோசித பெருமாள் கோவில்களிலும் கார்த்திகை பெருவிழாவை ஒட்டி, முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.