சோளிங்கர் பக்தோசித பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவிலுக்கு எதிரே சின்ன மலையில், யோக அனுமன் அருள்பாலித்து வருகிறார். யோக நரசிம்மரின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில், சோளிங்கர் நகரில் உள்ளது. நவராத்திரி உற்சவத்தை ஒட்டி, மலைக்கோவிலில் இருந்து அமிர்தவல்லி தாயார், உற்சவர் கோவிலுக்கு கடந்த புரட்டாசி மாதம் எழுந்தருளினார். தொடர்ந்து உற்சவர் சன்னிதியில் அருள்பாலித்து வரும் அமிர்த்தவல்லி தாயார், பக்தோசித பெருமாள் திருக்கல்யாணம் நேற்று மாலை நடந்தது. முன்னதாக காலை 11:00 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு காசி யாத்திரை வைபவமும், 6:00 மணிக்கு திருக்கல்யாணமும் நடந்தது. இரவு 8:00 மணிக்கு, உற்சவர் அமிர்தவல்லி தாயாருடன் பக்தோசித பெருமாள் மணக்கோலத்தில் வீதியுலா எழுந்தருளினார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.