உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வேலை வாங்கி தருவதாக மோசடி தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., மீது புகார்

வேலை வாங்கி தருவதாக மோசடி தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., மீது புகார்

ஆத்தூர்: தலைவாசல் அருகே மக்கள் நலப்பணியாளர் வேலை வாங்கி கொடுப்பதற்கு பணம் வசூல் செய்ததாக, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., மற்றும் ஒன்றிய செயலாளர் மீது மாவட்ட எஸ்.பி.,யிடம் தி.மு.க.,வை சேர்ந்த பஞ்., தலைவர் புகார் செய்துள்ளார். அதன்பேரில், தி.மு.க., ஒன்றிய செயலாளரிடம், ஆத்தூர் டி.எஸ்.பி., விசாரணை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைவாசல் அருகே உள்ள வெள்ளையூர் கிராமத்தை சேர்ந்தவர் தி.மு.க., நிர்வாகி ராஜாமணி. அவர், வெள்ளையூர் கிராம பஞ்சாயத்து தலைவராக இருந்து வருகிறார். அவரது மகள் செல்விக்கு, கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் மக்கள் நலப்பணியாளர் வேலை வழங்கும்படி, அப்போதைய தலைவாசல் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., சின்னதுரை, ஒன்றிய செயலாளர் லட்சுமணன் ஆகியோரிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கு, ஒன்றிய செயலாளர் லட்சுமணன், மக்கள் நலப்பணியாளர் வேலைக்கு 1.75 லட்சம் ரூபாய் பெற்றதாக தெரிகிறது. அதேபோல், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட நபர்களிடம், வேலை வாங்கி கொடுப்பதாக பணம் வசூல் செய்ததாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில், வெள்ளையூர் கிராம பஞ்சாயத்து தலைவர் ராஜாமணி, வேலைக்கு பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி வருவதாக, 'மாஜி' அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் மனு அளித்துள்ளார். அதன்பேரில், சில மாதங்களுக்கு முன், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து, தி.மு.க., ஒன்றிய செயலாளர் லட்சுமணன், 'மாஜி' எம்.எல்.ஏ., சின்னதுரை ஆகியோர் மீது, மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் செய்தார். அதன்பேரில், ஆத்தூர் டி.எஸ்.பி., அலுவலகத்தில், டி.எஸ்.பி., மாணிக்கம், தி.மு.க., ஒன்றிய செயலாளர் லட்சுமணனிடம் விசாரணை நடத்தினார். அப்போது, புகார் தெரிவித்த நபருக்கு பணம் உடனடியாக வழங்கிட வேண்டும். அவ்வாறு இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, டி.எஸ்.பி., மாணிக்கம் எச்சரிக்கை விடுத்தார். இதுகுறித்து தலைவாசல் தி.மு.க., ஒன்றிய செயலாளர் லட்சுமணனிடம் கேட்டபோது, ''மக்கள் நலப்பணியாளர் வேலைக்கு பணம் வாங்கியது தொடர்பாக போலீஸார் விசாரணை செய்தனர். எங்களுக்குள் பேசி சுமூக தீர்வு ஏற்பட்டதால், எவ்வித பிரச்னையும் இல்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்