விதிமீறி மண் அள்ளிய வாகனம் பறிமுதல்: இருவர் மீது வழக்கு
விதிமீறி மண் அள்ளிய வாகனம் பறிமுதல்: இருவர் மீது வழக்குநாமக்கல்:பேளுக்குறிச்சி அருகே, விதிமீறி மண் அள்ளிய லாரியை பறிமுதல் செய்த போலீசார், இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சி கணவாய் பகுதியில், தனியார் நிலத்தில் மண் அள்ளும் பணி நடந்து வருகிறது. இதில், 'பர்மிட்' எடுத்து ஒரு தரப்பினர் மண் அள்ளி வருவதாகவும், மற்றொரு தரப்பினர், 'பர்மிட்' எதுவும் இல்லாமல், இரவு நேரத்தில் மண் அள்ளி செல்வதாகவும் புகார் எழுந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வண்டியை சிறைபிடித்து, ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.இதுகுறித்து, அப்பகுதி மக்கள், நேற்று வி.ஏ.ஓ., மற்றும் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, வி.ஏ.ஓ., சுதா அளித்த புகார்படி, சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்த போலீசார், மண் லோடுடன் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரியை பிடித்தனர்.லாரி டிரைவரான, சேந்தமங்கலத்தை சேர்ந்த விஜய், 30, தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து லாரி உரிமையாளரான குள்ளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த கோபிநாத், 35, லாரி டிரைவர் விஜய் ஆகியோர் மீது பேளுக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, லாரியை பறிமுதல் செய்தனர்.