வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
நாமக்கல்:எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில், வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர், ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்து, நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒருங்கிணைப்பாளர்கள் விஜயகாந்த், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், வருவாய்த்துறை மற்றும் நில அளவைத்துறை சார்ந்த அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிருக்கும், உடைமைக்கும், பாதுகாப்பு அளிக்கும் வகையில், சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை அரசு இயற்ற வேண்டும். காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையிலான பணி உச்சவரம்பு, 5 சதவீதம் என்பதை, 25 சதவீதமாக உயர்த்த வேண்டும்.வருவாய்த்துறையினரின் நியாயமான கோரிக்கைகளை பேச்சுவார்த்தை நடத்தி நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். வருவாய்த்துறை அலுவலர்கள், நில அளவையர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் என, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.