மேலும் செய்திகள்
சேந்தமங்கலத்தில்19ல் ஜல்லிக்கட்டு
30-Mar-2025
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் அருகே, பச்சுடையாம்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஏராளமான காளைகள், வீரர்களிடம் சிக்காமல் சிட்டாக பறந்தன. இதில் காளைகள் முட்டி தள்ளியதில், 18 வீரர்கள் காயமடைந்தனர்.நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே, பச்சுடையாம்பட்டியில், நேற்று ஜல்லிக்கட்டு விழாக்குழு சார்பில், ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. ஆர்.டி.ஓ., சாந்தி, அட்மா குழு தலைவர் அசோக்குமார், டவுன் பஞ்., தலைவர் சித்ரா தனபால் ஆகியோர், கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தனர். முன்னதாக, மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ள, சேலம், ஆத்துார், திருச்சி, துறையூர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 620க்கும் மேற்பட்ட காளைகளை கொண்டு வந்திருந்தனர். இந்த காளைகளை, கால்நடைத்துறையினர் மருத்துவ பரிசோதனை செய்து வாடிவாசலுக்கு அனுப்பினர். மேலும், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கும், மருத்துவத்துறையினர் உடல் பரிசோதனை செய்து அனுப்பி வைத்தனர்.முதலாவதாக, கோவில் காளையை, வாடிவாசல் வழியாக அவிழ்த்து விட்டனர். அதை தொடர்ந்து, ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. இதில், சில காளைகள் கம்பீரமாக நின்று, மாடுபிடி வீரர்களை துவம்சம் செய்தன. ஒரு சில காளைகள், மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் சிட்டாக பறந்து சென்றது. சில காளைகள் முட்டி தள்ளியதில், 18 மாடு பிடி வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள், '108' அவசரகால ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றனர். காளைகளை பிடிக்கும் வீரர்களுக்கு, காளைகளின் உரிமையாளர்கள், விழாக்குழு சார்பில், மிக்ஸி, கிரைண்டர், வாட்ச் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. எம்.பி., ராஜேஸ்குமார், காளைகளை பிடித்து அடக்கிய வீரர்களுக்கும், சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கி பாராட்டினார்.
30-Mar-2025