அமைச்சர் நிகழ்வுக்கு ரூ.7 லட்சம் செலவுஅத்தியாவசிய பணிக்கு மட்டும் நிதி இல்லை
'அமைச்சர் நிகழ்வுக்கு ரூ.7 லட்சம் செலவுஅத்தியாவசிய பணிக்கு மட்டும் நிதி இல்லை'தாரமங்கலம்:தாரமங்கலம் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, நகராட்சி தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். காலை, 11:30 மணிக்கு அங்கு வந்த, 8வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் ஜெயந்தி, கூட்ட அரங்கம் முன் காலி குடத்துடன் அமர்ந்து, 'குடிப்பதற்கு தண்ணீர் இல்லை' என்ற வாசகம் அடங்கிய பதாகையை பிடித்து, தர்ணாவில் ஈடுபட்டார்.கமிஷனர் காஞ்சனா உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு நடத்தியதால், கவுன்சிலர் கூட்ட அரங்கிற்குள் சென்றார். தொடர்ந்து கூட்டம் தொடங்கும் முன், அ.தி.மு.க., கவுன்சிலர் ருக்மணி, 'என் வார்டில் வாத்தியார் தோட்டம் பகுதியில் குடிநீர் முறையாக வரவில்லை' என, 2 அடி குடிநீர் குழாயை காட்டி முறையிட்டார். பா.ம.க., கவுன்சிலர் தனபால், '36 வீடுகளில் சீராக குடிநீர் வராததால், அந்த பகுதியில் வால்வு அமைத்து சீராக வினியோகிக்க பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் பலனில்லை. அத்தியாவசிய பணி செய்ய நகராட்சியில் நிதி இல்லை என கூறும் நிர்வாகம், அமைச்சர்கள் நிகழ்ச்சிக்கு மட்டும், 7 லட்சம் ரூபாய் செலவு செய்கிறது' என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.அதற்கு தலைவர் குணசேகரன், 'அமைச்சர் நிகழ்ச்சிக்கு செலவு செய்வதை பற்றி பேசாதீர்கள். தேவையானதை கேளுங்கள்' என்றார். தொடர்ந்து, 'ஒவ்வொரு மாத வரவு, செலவு கணக்குகளை கூட்டத்தில் தெரியப்படுத்த வேண்டும்' என, தனபால் கூறினார். இதையடுத்து மதியம், 12:30 மணிக்கு கூட்டம் தொடங்கியது.தரம் உயர்த்த நடவடிக்கை அதில் தலைவர் குணசேகரன், 'நகராட்சியில் உயர்நிலைப்பள்ளி இல்லாததால், ஜலகண்டாபுரம் சாலையில் நுாற்றாண்டு விழா கண்ட நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கைலாசநாதர் கோவில் அருகே துவக்கப்பள்ளி கட்டடம் பயன்படுத்த முடியாதபடி உள்ளது. அதை அகற்றி அங்கு புது பள்ளி கட்டடம் கட்ட கல்வித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார். அதற்கு கவுன்சிலர்கள் அனைவரும் வரவேற்றனர். தொடர்ந்து, 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தி.மு.க.,வை சேர்ந்த துணைத்தலைவர் தனம் உள்ளிட்ட கவுன்சிலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.